Pin It

Widgets

வீணையின் நரம்பு
அறுபடுகையில் எழும்
மென்னதிர்வாய்-உன்
நினைவுகள்

தடங்களற்ற பாதையில்
தடம் பதித்து நீளும்
ஒரு பொழுதில்
எங்கேனும் மறையக்கூடும்
உனை சுமக்கும் நான்

அலையின் மணலரிப்பாய்
உள்ளிருந்து உள்ளிழுக்கிறாய்
என்னை

பறப்பதற்கான சிறகுகள்
காட்டுகிறாய்
வானமெனம் ஓடிட்டு

நரம்பினைக்கொண்டு
என்னை எனக்கே
முள் வேலியாக்கியிருக்கிறாய்
உன் ஒத்திசைவுக்கு ஏற்றார்போல

என் அலங்காரங்கள்
உன்னை பிரதிபலிக்கிறது
முகபாவனை
என்னைக்கண்டு
பல்லிளிக்கிறது

சுயமென
மெளனம் காக்கிறேன்
இருளென
பற்றவைக்கிறாய்

துணையென எண்ணி
இணையாய் படறுகிறேன்
வேலிக்கொடியென
கத்தரிக்கிறாய்

எனது படிக்கட்டுகளை
தீர்மானித்து நிற்கிறேன்
இயக்கத்தை நீ
எடுத்துக்கொள்கிறாய்

கரையொதுங்கிய
கடல் சிப்பிகளை
மடி சேர்க்கும் சிறுமியாய்
குதுகலிக்கிறேன்
குப்பையென கையுதறுகிறாய்

உன் பயணமெங்கும்
உடனழைக்கிறாய்
ரெக்கைகளை நீ அசைத்து
கூண்டிற்குள் எனையிருத்தி

நிலைக்கண்ணாடி எனில்
பாதரசமாகிறாய்
கண்ணாடிக்கோப்பையெனில்
எதிர் துருவம் அமர்கிறாய்

குழாயிலிருந்து
பீறிடும் நீராய்
உமிழ நினைக்கிறேன்
உச்சந்தலையில்
பெண்மை ஆணியடிக்கிறாய்

காத்திருப்புகள்
புறக்கணிப்பாகும் நாளில்
விடுதலைக்குத்துணிகிறேன்
சோதனையென
கெக்கலிட்டு சிரிக்கிறாய்

நரம்புகளின் ஓசை
அணைத்தும் சமயம் பார்த்து
மீட்டுகிறாய்-அது
முகாரியாய் இருந்தாலும்
கால்மேல் காலிட்டு ரசிக்கிராய்

உன் கைபற்றி
நடக்க எத்தனிக்கிறேன்
சிறையென உதறுகிறாய்

பறவையின் லாவகம்
வாய்த்துவிடும் கனவில்
தட்டியெழுப்பி
மோகம் புசிக்கிறாய்

வருகைக்கான
வாசல் இருப்பில்
வேடிக்கைப்பார்கிறதா
கண்களென
வேலியிடுகிறாய்
அன்பின் படயலுக்கு

கைக்குள் துயிலும்
குழந்தையின் எச்சில்
ஒழுகலை துடைத்தெடுக்கும்
தாயாய் விழித்திருக்கிறேன்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
நினைவிலில்லை உன் புன்னகை

சொற்களின் சுதந்திரத்தை
மூச்சுக்காற்றின் வழி
உலவவிடுகிறேன்
காற்றிலொரு இறகு
உதிர்த்து...

சுவற்றுப்பல்லிபோல
உன் நாவெட்டும்
தூரத்தில் எனையிருத்தி
உன் விருப்பமென
மெச்சுகிறாய்

பட்டாம்பூச்சியாய்
அமர விழைகிறேன்
இறகு பிடித்து
காக்கிறேன் என்கிறாய்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets